நாமக்கல் மாவட்டத்தில்உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 84 வாகனங்கள் பறிமுதல்வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் வட்டார போக்குவரத்து துறையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணம் இன்றி இயக்கப்பட்ட 84 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
வாகன சோதனை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் பல்வேறு இடங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் ஆகியோர் தலைமையில், திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும், ராசிபுரம், பரமத்திவேலூர் அலுலகங்களில் பணியாற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல், சரவணன், உமா மகேஸ்வரி, நித்யா ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
மொத்தம் 2,248 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 528 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 478 வரியும், 8 லட்சத்து, ரூ.98 ஆயிரத்து 500 அபராதமும் வசூல் செய்யப்பட்டது.
84 வாகனங்கள் பறிமுதல்
அதேபோல், ஹெல்மெட் அணியாமல் பயணம், செல்போன் பேசியபாடி வாகனத்தை ஓட்டியது, அதிகபாரம் ஏற்றிய வாகனங்கள், சீட்பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்கியது, வாகனங்களில் அதிக ஆட்களை ஏற்றி சென்றது போன்ற குற்றங்களுக்காக, 444 வாகனங்களுக்கு ரூ.16 லட்சத்து 11 ஆயிரத்து 700 அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த வாகன சோதனையின் போது உரிய ஆவணங்களான தகுதிச்சான்று புதுப்பிக்காதது, அனுமதிசீட்டு இல்லாமல் வாகனத்தை இயக்குதல், வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் உள்பட மொத்தம் 84 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.