நல்லம்பள்ளி அருகே பாலம் அமைக்ககோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
நல்லம்பள்ளி அருகே பாலம் அமைக்ககோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே பாலம் அமைக்ககோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொப்பையாறு கால்வாய்
நல்லம்பள்ளி அருகே கம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது விநாயகபுரம் கிராமம். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு பணிக்கு செல்லும் பொதுமக்கள் நாள்தோறும் சென்று வர வேண்டும் என்றால் கிராமத்திற்கு முன் உள்ள தொப்பையாறு கால்வாயை கடந்து செல்ல வேண்டும்.
இவ்வாறு செல்லும் கால்வாய்க்கு பாலம் இல்லாததால், கிராம மக்கள் நிதி உதவியோடு அமைக்கப்பட்ட தற்காலிக மண் பாலம் உள்ளது. இந்த மண் பாலம் கனமழையால் சரிந்தது. தற்போது பாலத்தை கடக்க அபாய நிலை உள்ளதால் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வர முடியாமலும், வாகனங்கள் வந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
தொப்பையாறு கால்வாய் இடையே பாலம் அமைத்து தரக்கோரி நீண்ட காலமாக தர்மபுரி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு கொடுத்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று ஒன்றினைந்து, உடைப்பு ஏற்பட்ட மண் பாலத்தில் நின்று உடனடியாக பாலம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ஆர்ப்பாட்டம் மீது அரசு விரைந்து கவனம் செலுத்தி, பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், தற்போது போக்குவரத்து துண்டிப்பு ஏற்படுவதற்க்கு முன், அரிப்பு ஏற்பட்டு உடையும் நிலையில் உள்ள மண் பாலத்திற்க்கு தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி மண்பாலத்தை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ரேஷன் அட்டை, ஆதார், வாக்காளர் அட்டைகளை தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்போம் என்றனர்.