நாகூர் சில்லடி தர்கா கந்தூரி விழா
நாகூர் சில்லடி தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகூர்:
நாகை மாவட்டம் நாகூரில் சில்லடி தர்கா உள்ளது. நாகூர் ஆண்டவர் என்று அழைக்கப்படும் ஷாகுல் ஹமீது காதீர் வலி 40-நாட்கள் தவம் இருந்த இடமாக இந்த சில்லடி தர்கா இருந்து வருகிறது. இந்த சில்லடி தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக தர்கா அலங்கார வாசலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு பீரோடும் தெரு வழியாக சில்லடி தர்காவை சென்றடைந்தது. பின்னர் தர்கா பரம்பரை கலிபா சிறப்பு துவா ஓதி பாய்மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு ஊர்வலம் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகம் செய்து வருகிறது.