நாகூர்: இருதரப்பு மீனவர்கள் இடையே மோதல் - 2 பேர் படுகாயம்

நாகூரில் இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-07-06 07:28 GMT

நாகூர்,

நாகை மாவட்டம், நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும், ஏலம் விடுவதற்கும் மேலபட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. மீன்பிடி துறைமுகத்தில் தங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என மேல பட்டினச்சேரி கிராம மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், மேல பட்டினச்சேரி கிராம மீனவர்களுக்கும் தமிழக அரசால் கட்டப்பட்ட துறைமுகத்தில் மீன் விற்பனை மற்றும் மீன் ஏலம் விடுவதற்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று கடந்த 15-ந் தேதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தை கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது.

இதனிடையே மேல பட்டினச்சேரி கிராமத்தில் யாரும் இல்லாததை அறிந்த மற்றொரு தரப்பு மீனவர்கள் அந்த கிராமத்தில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளை அடித்து நொறுக்கி, இருசக்கர வாகனங்களை உடைத்து சேதப்படுத்தி கையில் ஆயுதங்களுடன் 50 பேர் கொண்ட கும்பல் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் மேலபட்டினச்சேரி கிராம நிர்வாகிகள் சுரேஷ், மற்றொரு சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீது மற்றொரு தரப்பு மீனவர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் பல்த்த காயம் அடைந்த மேலபட்டினச்சேரி கிராம மீனவர்கள் சுரேஷ், மற்றொரு சுரேஷ் 2 பேர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தங்கள் கிராம மீனவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கிராம மக்கள் நேற்று இரவு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு மேற்கொண்டு கலவரம் எதுவும் நடைபெறாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்