மதுரையில் நாடார் மகாஜன சங்க தேர்தல் வாக்குப்பதிவு

நாடார் மகாஜன சங்கத்தின் 165 பதவிகளுக்கான தேர்தல் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நேற்று நடந்தது.;

Update:2022-11-07 04:57 IST

மதுரை,

நாடார் மகாஜன சங்கம் மற்றும் அதன் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் மதுரையில் நேற்று நடந்தது.

நாடார் மகாஜன சங்க தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், செயலாளர் (பள்ளிகள்), செயலாளர் (மேன்ஷன்கள்), செயலாளர் (அச்சகம்) மற்றும் நாடார் மகாஜன சங்கம் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி பேரவை தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், இணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நாடார் மகாஜன சங்கம் நாகர்கோவில் பழவிளை காமராஜ் தொழில்நுட்ப கல்லூரி பரிபாலன சபையின் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், இணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 165 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது.

மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் பதவிக்கு ஏற்கனவே அப்பதவியில் இருந்த கரிக்கோல்ராஜ் மற்றும் அவரது தரப்பிலான அணியும், ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் நாடார் மகாஜன சங்கம் மீட்பு அணி சார்பில் தலைவர் பதவிக்கு சங்க நிறுவனர் ராவ் பகதூர் ரத்தினசாமி நாடாரின் கொள்ளுப்பேரன் முத்துசாமி, பொதுச்செயலாளர் பதவிக்கு என்.ஆர்.தனபாலன் மற்றும் அவர்களது தரப்பில் ஒரு அணியும், சுயேச்சையாக சிலரும் போட்டியிட்டனர்.

சங்க உறுப்பினர்கள் தங்களது ஓட்டுகளை பதிவு செய்வதற்கு வசதியாக 30 பூத் அமைக்கப்பட்டிருந்தன. காலை 8 மணி முதல் ஓட்டுப்பதிவு நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் ஓட்டு போட வந்திருந்தனர். மழை பெய்தபோதும் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது.

நீதிபதி கிருபாகரன்

62,169 பேர் வாக்களிக்க கூடிய இந்த தேர்தல் மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் மேற்பார்வையில் நடைபெற்றது.

நாடார் மகாஜன சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 3 துணைச் செயலாளர்களுக்கு ஒரு வாக்கு சீட்டு உள்பட மொத்தம் 7 வாக்குச் சீட்டுகள் ஒவ்வொரு வாக்காளருக்கும் கொடுக்கப்பட்டது.

மாலை 5 மணியுடன் தேர்தல் முடிவடைவதாக இருந்தது. ஆனால் மேலும் வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருந்ததால், 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

முடிவில் 30 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாகதகவல்கள் வெளியாகின. நேற்று இரவு 8 மணிக்கு மேல் வாக்குகள் எண்ணும் பணி, தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் தொடங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்