நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை: பாதிரியார்கள், திமுக நிர்வாகி உள்பட 15 பேர் தலைமறைவு - பரபரப்பு தகவல்கள்
நாம் தமிழர் கட்சி பிரமுகர் சேவியர்குமார் இஸ்திரி பெட்டி, பூந்தொட்டியால் தாக்கி கொல்லப்பட்டார்.;
குமரி,
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 45), கன்னியாகுமரி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். மேலும் மைலோடு கிறிஸ்தவ ஆலய பங்குப்பேரவையில் முன்னாள் பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு ஜெமிலா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஜெமிலா, மைலோடு ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார்.
இந்த நிலையில் சேவியர் குமாருக்கும், தற்போதுள்ள பங்கு பேரவை தரப்பினருக்கும் இடையே நிர்வாக ரீதியாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக 2 தரப்பினரும் இரணியல் போலீஸ் நிலையத்தில் மாறி, மாறி புகார் அளித்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சேவியர் குமார் பங்கு நிர்வாகத்திற்கு எதிராக கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே ஜெமிலாவை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாக தெரிகிறது. இதனால் அதிா்ச்சி அடைந்த ஜெமிலா மீண்டும் பணியில் சேர முயற்சி மேற்கொண்டார். அப்போது தனது கணவர் இனி இதுபோன்று சமூக வலைதளங்களில் பதிவிட மாட்டார் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசுவதற்காக நேற்று முன்தினம் சேவியர் குமார் மைலோடு ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சென்றார். அங்கு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் சேவியர்குமார் இஸ்திரி பெட்டி, பூந்தொட்டியால் தாக்கி கொல்லப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் உருவானது. அதே சமயத்தில் குற்றவாளிகள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.
குற்றவாளிகளை கைது செய்தால்தான் உடலை எடுக்க விடுவோம் என கூறி நாம் தமிழர் கட்சியினர் மற்றும் உறவினர்கள் நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாலை 1.45 மணிக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சேவியர்குமார் மனைவி ஜெமிலா, போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், நாங்கள் மயிலோடு ஆலயத்தில் உறுப்பினர்களாக உள்ளோம். உறுப்பினர் என்ற முறையில் வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக என் கணவர் கேள்வி எழுப்பினார். இதனால் அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். இதுதொடர்பாக புகார் அளித்தும் யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இந்தநிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து என் கணவரை கொன்று விட்டனர்.
எனவே, என் கணவரை தாக்கி கொலை செய்த விவகாரத்தில் மைலோடைச் சேர்ந்த ரமேஷ் பாபு, மைலோடு பாதிரியார் ராபின்சன், ஜஸ்டஸ் ரோக், சுரேஷ், எட்வின் ஜோஸ், சோனிஸ், அஜய், அர்வின், டெரிக், வினோ, வின்சென்ட், ஜெலிஸ், பெனிட்டோ மற்றும் மேலும் 2 போ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அதன்பேரில் ரமேஷ் பாபு உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ரமேஷ் பாபு தி.மு.க. ஒன்றிய செயலாளராகவும், ராபின்சன், பெனிட்டோ ஆகிய 2 பேரும் பாதிரியாராகவும் உள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.