அம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

ராதாபுரம் நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.

Update: 2023-01-25 21:30 GMT

ராதாபுரம்:

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் வரகுணபாண்டீஸ்வரர் நித்திய கல்யாணி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மஞ்சள் காணிக்கை செலுத்துவது சிறப்பாகும். திருமணமாகாத ஆண்கள், பெண்கள் தங்களுக்கு திருமணம் தள்ளிப்போகும் பட்சத்தில், அம்பாளுக்கு மஞ்சளை காணிக்கையாக அளிக்கும்போது திருமண தடை நீங்கி சிறப்பாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

ராதாபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களும் தங்கள் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் யாவற்றையும் கோவிலுக்கு மஞ்சள் வாங்கி கொடுத்த பின்னரே தொடங்குவர். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த, பழமையான இந்த கோவிலுக்கு பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு வந்தார். மற்ற பக்தர்களை போல அம்பாளுக்கு மஞ்சள் வாங்கி வந்த அவர், அதனை அம்பாளுக்கு படைத்து தரிசனம் செய்தார்.

இவரை பார்த்த கிராம மக்கள் அங்கு வந்து யோகிபாபுவுடன் சேர்ந்து போட்டோவும் எடுத்துக்கொண்டனர். மேலும் ஊர் பெரியவர்கள் அவரிடம், வருகிற பிப்ரவரி 9-ந்தேதி ராதாபுரம் தெற்கு தெருவில் அமைந்துள்ள பெரிய கோவிலான புலிமாடசாமி கோவில் கொடை விழாவிற்கு வரும்படி யோகிபாபுவுக்கு அழைப்பு விடுத்தனர். பின்னர் அவர் அங்கிருந்து சென்றார். இதுபற்றி கோவில் பூசாரி சேகர்சாமி கூறும்போது, கடந்த 2 மாதத்திற்கு முன் ஒரு வியாழக்கிழமை அன்று யோகிபாபு கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் என்ன எடை இருக்கிறாரோ, அதே அளவிலான மஞ்சளை கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்தார். மக்கள் காணிக்கையாக கொடுக்கும் மஞ்சள் பிரசாதத்திற்கும், அபிஷேகத்திற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக மக்கள் கொடுத்த காணிக்கையான மஞ்சள், இன்றைக்கும் கெடாமல் இருக்கிறது. இந்த சிறப்பை யோகிபாபுடன் சொன்ன உடன்தான் அவர் அதனை செய்தார். இந்த முறை வந்த போது, ஒரு கிலோ மஞ்சளை அம்பாள் பாதத்திலும், ஒரு கிலோ மஞ்சளை இடித்தும் காணிக்கையாக கொடுத்தார். கல்யாணி அம்பாள்தான், இங்கு அவருக்கு மிகவும் பிடித்த தெய்வம். கால பைரவர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தார். மேலும் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள விஜயாபதி விசுவாமித்திரர் கோவிலுக்கு சென்றும் வழிபட்டு இருக்கிறார், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்