மாயமான வாலிபர் புதரில் பிணமாக மீட்பு

நாகர்கோவில் அருகே மாயமான வாலிபர் புதரில் பிணமாக மீட்பு;

Update: 2023-07-08 20:29 GMT

மேலகிருஷ்ணன்புதூர், 

நாகர்கோவில் அருகே மாயமான வாலிபர் கன்னியாகுமரி அருகே முள் புதரில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர் மாயம்

நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான்விளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் கோபி (வயது21). இவர் டிப்ளமோ அக்ரி படித்துவிட்டு ஈத்தாமொழி அருகே ஆடராவிளையில் நர்சரி கார்டன் நடத்தி வந்தார்.

இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி மதியம் வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர் வீடுகளிலும் பல இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து கோபியின் தாயார் லதா சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து, பொறுப்பு இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி கோபியை தேடி வந்தனர்.

பிணமாக மீட்பு

இந்தநிலையில் நேற்று மாலையில் கன்னியாகுமரி சமாதானபுரம் அருகே முள்புதரில் ஒரு வாலிபரின் உடல் கிடப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த ேபாது பிணமாக கிடந்தது கோபி என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அவரது ெபற்றோர் விரைந்து வந்து பிணத்தை பார்த்து கதறி அழுதனர்.

இறந்து கிடந்த கோபி பனியன் மட்டும் அணிந்திருந்த நிலையில் அவருடைய பேண்ட் மற்றும் உள்ளாடை அருகே ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தது.

கடிதம் சிக்கியது

மேலும் அந்த பையில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில், 'என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. யாரையும் விசாரிக்க வேண்டிய தேவை இல்லை. அம்மா ஐ லவ் யூ, அப்பா ஐ லவ் யூ, அண்ணா மிஸ் யூ. நான் தொழில் செய்ய இடம் வழங்கிய நில உரிமையாளருக்கும் நன்றி' என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்ததாக புகார்

கோபியின் சாவு குறித்து அவரது தந்தை ரவி போலீசாரிடம் கூறும்போது, 'எனது மகன் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர் மாயமான அன்று கூட ஒரு லோடு தென்னங்கன்றை விற்பனைக்கு அனுப்பி உள்ளார். அதனால் தென்னங்கன்று விற்பனையில் உள்ள தொழில் போட்டியில் யாரோ என் மகனை கடத்தி கொலை செய்து விட்டனர். கோபி பிணமாக கிடந்த இடத்திற்கு வரவேண்டிய தேவையே கிடையாது. இங்கு கண்டெடுக்கப்பட்ட கடிதம் எனது மகன் கோபி எழுதி இருக்க வாய்ப்பே இல்லை. யாரோ திட்டமிட்டு எழுதி வைத்துள்ளனர்' என கூறி கதறி அழுதார்.

மேலும் கோபியின் மோட்டார் சைக்கிளையும், அவருடைய செல்போனையும் அந்த பகுதியில் காணவில்லை. இதனை அடுத்து போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்புதான் கோபியின் சாவுக்கான காரணம் தெரிய வரும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்