2 கோவில்களின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை
தோகைமலை, நச்சலூர் பகுதிகளில் 2 கோவில்களின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை அள்ளி சென்றனர்.;
பழனியாண்டவர் கோவில்
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே தெலுங்கபட்டியில் பிரசித்தி பெற்ற பழனியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கடந்த 11-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது புதிதாக வாங்கப்பட்ட உண்டியல் கோவில் கருவறையில் வைக்கப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை தினமும் கோவிலில் மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோவில் பூட்டப்பட்டது. நேற்று காலை வழக்கம்போல் பூசாரி கோவிலை திறக்க வந்தார்.
உண்டியலில் பணம் கொள்ளை
அப்போது, கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கோவில் உண்டியலை காணவில்லை. இதையடுத்து சுற்றுவட்டார பகுதிகளில் தேடினர். அப்போது கோவிலின் எதிர்புறம் உள்ள காட்டுப்பகுதியில் கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டு உண்டியலை மட்டும் அங்கு போட்டு விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நச்சலூர்
நச்சலூர் அருகே நெய்தலூரில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வழக்கம்போல கோவில் பூசாரி பழனிச்சாமி என்பவர் பூஜைகள் செய்தார். பின்னர் அன்று இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
அப்போது கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் அதனை உடைக்க முடியாததால், கோவிலில் இருந்த சிலிண்டர், அடுப்பு, குத்துவிளக்குகள் உள்பட சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மட்டும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.