`செல்போன் லிங்க்' மூலம் பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேரிடம்ரூ.18½ லட்சம் சுருட்டிய மர்ம கும்பல்-தென்காசி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

`செல்போன் லிங்க்' மூலம் பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேரிடம் ரூ.18 லட்சத்து 65 ஆயிரத்தை சுருட்டிய மர்ம கும்பலை தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2023-01-25 18:45 GMT

`செல்போன் லிங்க்' மூலம் பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேரிடம் ரூ.18 லட்சத்து 65 ஆயிரத்தை சுருட்டிய மர்ம கும்பலை தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பள்ளி ஆசிரியர்

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 32). இவர் செங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது செல்போனுக்கு கடந்த மாதம் ஒரு `லிங்க'் வந்தது. அதில் `கிளிக்' செய்து பார்த்தபோது ரூ.200 செலுத்தினால் ரூ.400 கிடைக்கும் என்று குறுந்தகவல் வந்தது. உடனே பிரபு ரூ.200 செலுத்தவே அவரது வங்கி கணக்கிற்கு ரூ.400 வரவாகி விட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் பல்வேறு தடவைகளாக ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் வங்கியின் மூலமாக செலுத்தினார்.

ஆனால் அதற்கு பிறகு எந்த பணமும் அவருக்கு திரும்ப வரவில்லை. இதனால் தனது பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்து அவர் திடுக்கிட்டார்.

ஓட்டல் தொழிலாளி

இதேபோல் தென்காசி அருகே உள்ள சாம்பவர் வடகரையை அடுத்த ஊர்மேலழகியான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (32). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது செல்போன் `வாட்ஸ்-அப்' மூலம், அவருக்கும், அவரது மனைவிக்கும் வேலை வாய்ப்பு தருவதாகவும், அதற்கு முன் வைப்பு தொகையாக பணம் செலுத்த வேண்டும் என்றும் குறுந்தகவல் வந்துள்ளது.

இதனை நம்பிய சுரேஷ் 3 தவணைகளாக ரூ.4.61 லட்சத்தை அதில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளார். நீண்ட நாட்களாக ஆகியும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. பணத்தையும் திரும்ப வாங்க முடியவில்லை.

தனியார் நிறுவன ஊழியர்

தென்காசி அருகே உள்ள பண்பொழியைச் சேர்ந்தவர் இளையராஜா (28). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் யூடியூப்பில் வேலை தொடர்பாக ஒரு லிங்கை பார்த்துள்ளார். பின்னர் அதனை நம்பிய அவர் அந்த லிங்கை தொட்டுள்ளார். உடனே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.12 லட்சத்து 55 ஆயிரம் போய்விட்டது.

சைபர் கிரைம் போலீசார்

இந்த மூன்று சம்பவங்கள் குறித்தும் தென்காசி சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் செய்யப்பட்டது. இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அருள் செல்வி விசாரணை நடத்தி வருகிறார்.

விசாரணையில், இதில் டெல்லி, கொல்கத்தா, பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு பணத்தை சுருட்டியது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கினர். அதில் இருந்து பணத்தை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

போலீசார் எச்சரிக்கை

பொதுமக்கள் செல்போன்கள் மற்றும் இணையதளங்களில் பழக்கம் இல்லாத நபர்கள் அனுப்பும் லிங்குகளை தொட வேண்டாம் என்றும், பண ஆசைகாட்டி வாட்ஸ்-அப் மூலம் கேட்பவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்