கல்லூரி விடுதியில் மாணவி மர்ம மரணம்: உரிய விசாரணை நடத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்

திருச்சி தனியார் கல்லூரி விடுதியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

Update: 2024-06-26 03:48 GMT

கோப்புப்படம்

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயாலளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரக் கழகச் செயலாளர் பாலாஜியின் மகள் தாரணி, திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. தாரணியை இழந்துவாடும் பாலாஜியின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடல்நிலைக் குறைவு என நேற்று பிற்பகலில் தகவல் தெரிவித்த தாரணியை உடனடியாக பார்க்கச் சென்றபோது நீண்ட நேரம் காக்க வைத்ததோடு, இரண்டு மணி நேரம் கழித்து தாரணி தற்கொலை செய்து கொண்டதாக கூறிய கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மாணவியின் தந்தை பாலாஜி திருச்சி சமயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

எனவே, அந்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, தாரணியின் மர்ம மரணத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்