காதல் திருமணம்... சீர்வரிசை கொடுமை... அக்காவின் திருமணத்தன்று தங்கை மர்ம சாவு
அக்காவின் திருமணத்தன்று தங்கை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.;
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் திவ்யராஜ். இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன். இவர்களில் 3-வது மகள் பட்டதாரியான ஜெனிபர்(வயது 23). இவரும் இவர்களது உறவினரான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவை சேர்ந்த சவுரிராஜ் என்பவரின் மகன் மார்ட்டின்ராஜூம் காதலித்து வந்தனர்.
இதையடுத்து மார்ட்டின்ராஜ் குடும்பத்தினர், ஜெனிபரை திருமணம் செய்வதற்காக திவ்யராஜிடம் பேசியுள்ளனர். அதற்கு திவ்யராஜ் தனது 2-வது மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு திருமணம் செய்யாமல் 3-வது மகளுக்கு திருமணம் செய்வது நன்றாக இருக்காது என்று கூறி இந்த திருமணத்திற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
அப்போது மார்ட்டின்ராஜ், பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும், சீர்வரிசை எதுவும் வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி ஜெனிபரை, மார்ட்டின்ராஜ் திருமணம் செய்துள்ளார். அப்போது 2-வது மகள் திருமணம் முடிந்தவுடன் சீர்வரிசை செய்வதாக ஜெனிபரின் பெற்றோர் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருமணம் முடிந்து 10 நாட்களில் மார்ட்டின்ராஜ், மலேசியாவிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் ஜெனிபரின் அக்காவுக்கு நேற்று முன்தினம்(19-ந்தேதி) திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள ஒரு தேவாலயத்தில் திருமணம் நடந்தது. அந்த திருமணத்திற்கு ஜெனிபர், தனது மாமியார் மற்றும் நாத்தனாருடன் சென்றுள்ளார். அப்போது ஜெனிபரின் அக்காவிற்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை தங்களது செல்போனில் ஜெனிபரின் மாமியாரும், நாத்தனாரும் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெனிபரிடம், உனக்கு சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என்று அங்கேயே சண்டையிட்டதாகவும், உடனடியாக ஜெனிபரை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. அன்று இரவு தனது பெற்றோரிடம் செல்போனில் இதுகுறித்து பேசிய ஜெனிபர், அக்காவிற்கு மட்டும் இவ்வளவு சீர்வரிசை பொருட்களை உன் குடும்பத்தார் செய்துள்ளனர். உனக்கு மட்டும் ஏன் சீர்வரிசை எதுவும் செய்யவில்லை? என சொல்லி கொடுமைப்படுத்தி தன்னை தாக்கியதாக ஜெனிபர் தனது பெற்றோரிடம் கூறி உள்ளார்.
தொடர்ந்து அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது ஜெனிபரின் செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் பதற்றம் அடைந்த ஜெனிபர் குடும்பத்தினர், தங்கள் மகனை ஜெனிபர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அங்கு சென்று அவர் பார்த்தபோது ஜெனிபர் மயங்கி கிடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக அவரை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெனிபர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜெனிபரின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஜெனிபாின் பெற்றோர், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உதவி கலெக்டர் (பொறுப்பு) அர்ச்சனா, ஜெனிபர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்தனர். இதனைத்தொடர்ந்து ஜெனிபர் குடுபத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்காவின் திருமணத் தன்று தங்கை மா்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.