கட்சியில் இருந்து என்னை நீக்கியிருப்பது வேதனையளிக்கிறது - ரூபி மனோகரன்

செய்யாத தவறுக்காக என்னை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருப்பது வருத்தம் அளிப்பதாக ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-24 09:38 GMT

சென்னை,

தமிழக காங்கிரஸ் கட்சி பொருளாளராகவும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரூபி மனோகரன். கடந்த வாரம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ரூபி மனோகரன் மற்றும் ரஞ்சன் குமார் ஆகியோர் மீது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இன்று விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி உத்தரவிட்டு இருந்தனர். இன்று காலையில் கே.ஆர்.ராமசாமி தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடியது. இதில் ரஞ்சன் குமார் ஆஜராகி விளக்கம் அளித்தார். ரூபி மனோகரன் ஆஜராகவில்லை. அவர் 15 நாள் அவகாசம் கேட்டு இருந்தார். இதையடுத்து ரூபி மனோகரனை கட்சி பொருளாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக கே.ஆர்.ராமசாமி அறிவித்தார்.

இது தொடர்பாக ரூபி மனோகரன் கூறியதாவது:- நான் 20 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். நாங்குநேரி தொகுதியில் அதிக அளவில் உறுப்பினர்களையும் சேர்த்துள்ளேன். நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. செய்யாத தவறுக்காக என்னை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது.

சட்டமன்ற தொகுதியில் எனக்கு பல வேலைகள் உள்ளன. அதனால் தான் இன்று ஆஜராகவில்லை. எனது விளக்கத்தை கேட்ட பின்னர் தானே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

 

Tags:    

மேலும் செய்திகள்