எனது உயிருக்கும் ஆபத்து இருக்கிறது - ஜான் பாண்டியன் பரபரப்பு பேட்டி
கள்ளச்சாராய உயிரிழப்பை தடுக்க பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்று ஜான் பாண்டியன் கூறினார்.
நெல்லை,
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். அல்லது தொழிலாளர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கி வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். மாஞ்சோலை வழக்கில் ஐகோர்ட்டில் நல்ல தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். மாஞ்சோலை மக்களுக்கான எங்களுடைய போராட்டம் தொடரும்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை கண்காணித்து, பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். எங்களைப் போன்ற தலைவர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்கப்படவில்லை, நான் உள்ளிட்ட தலைவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதிமுக ஆட்சியில் எனக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை தற்போது விலக்கி கொண்டனர். ஒரு போலீஸ்காரர் மட்டுமே எனக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறார்.
அரசியல் கட்சி தலைவர்களான திருமாவளவன், கிருஷ்ணசாமி, சீமான் போன்றவர்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். என்னை போன்று பல மாவட்டங்களில் பயணம் செய்யும் தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் கஞ்சா, போதை பழக்கத்தின் காரணமாக கூலிப்படைகள் அதிகரித்துள்ளன. அவர்களை சில காவல்துறை அதிகாரிகள் ஊக்குவித்து வருகின்றனர். அவர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்தால், கூலிக்கு கொலை செய்பவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. நாங்கள் பயந்து போய் பாதுகாப்பு கேட்கவில்லை. அரசியல் தலைவர்கள் காக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
கள்ளச்சாராய உயிரிழப்பை தடுக்க பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். தற்போது என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். தவறு செய்தவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.