'தமிழக இளைஞர்களை உலகிலேயே முதன்மையானவர்கள் ஆக்குவதுதான் என் ஆசை' முதல்-அமைச்சர் பேச்சு

‘தமிழ்நாட்டு இளைஞர்களை உலகத்திலேயே முதன்மையானவர்களாக ஆக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை' என ‘நான் முதல்வன்' திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2023-08-08 00:09 GMT

சென்னை,

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டமான 'நான் முதல்வன் திட்டம்' கடந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

'நான் முதல்வன் திட்டம்' எனது கனவு திட்டம் என அந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை பல்வேறு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு வந்தார்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பை தாண்டி அவர்கள் விரும்பும் துறையில் திறனை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்திலும், இதன் மூலம் அவர்கள் உரிய வேலைவாய்ப்பை பெறவும் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 13 லட்சத்துக்கும் 14 ஆயிரத்து 519 மாணவ-மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.

ஓராண்டு வெற்றி விழா

இந்த திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசியதாவது:-

'நான் முதல்வன் திட்டம்' எனது கனவு திட்டம். மாணவர்கள், இளைஞர்கள் இடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இந்த திட்டம் காரணமாக இருக்கிறது.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டின் அனைத்து துறைகளும் வளர்ந்து வருகிறது. அனைத்து தரப்பினரும் உயர்ந்து வருகிறார்கள்.

இலக்கை தாண்டி சாதனை

தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள், கல்வியில், அறிவாற்றலில், சிந்தனைத் திறனில், பன்முக ஆற்றலில் முன்னேறக்கூடிய வகையில் அவர்களை உயர்த்த வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

தமிழ்நாட்டு இளைஞர்களை உலகத்திலேயே முதன்மையானவர்களாக ஆக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. சில திட்டங்கள், அப்போதைய தேவையை நிறைவு செய்வதாக இருக்கும். சில திட்டங்கள், ஓராண்டுக்கு பயன் தருவதாக இருக்கும். நான் முதல்வன் திட்டம் தலைமுறை தலைமுறைக்கு பயன்படுகின்ற திட்டம்.

ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி என்றுதான் முதலில் இலக்கு நிர்ணயித்தோம். முதல் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு, உயர் தரத்தில் திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த திட்டத்தின் மிகப்பெரிய சாதனை. இப்படி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு மிகச்சிறந்த வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கிறது என்பது, அடுத்த சாதனை.

அறிவு புரட்சி

நான் முதல்வன் திட்டம் மூலமாக, 445 என்ஜினீயரிங் கல்லூரிகளில் திறன் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பயிற்சி பெற்ற 65 ஆயிரத்து 34 மாணவர்கள் மிகச்சிறந்த இடங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

அதேபோன்று 861 கலை கல்லூரிகளில் 'நான் முதல்வன்' திட்டம் செயல்பாட்டில் இருந்தது. இங்கு பயிற்சி பெற்ற 83 ஆயிரத்து 223 மாணவர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

நான் முதல்வன் திட்டம் மூலமாக தனியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம் 5 ஆயிரத்து 844 என்ஜினியரிங் மாணவர்களுக்கும், 20 ஆயிரத்து 82 கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது, இந்த திட்டத்தின் ஓராண்டு வெற்றி.

'நான் முதல்வன்' இணையதளம் மூலமாக, 25 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இவைகள் எல்லாம் ஒரே ஒரு திட்டம் தமிழ்நாட்டு மாணவ சமுதாயத்தில் எப்படிப்பட்ட அறிவு புரட்சியை உருவாக்கி வருகிறது என்பதற்கான எடுத்துக்காட்டுகள்.

திறன் மேம்பட்டுள்ளது

தலைநகரத்தில் இருக்கின்ற தலைசிறந்த கல்லூரியில் படித்தால் தான் சிறந்த வேலைவாய்ப்பும், எதிர்காலமும் இருக்கும் என்ற நிலையை மாற்றி, தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலேயும் எந்த கல்லூரியில் படித்தாலும், அங்கே உரிய திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அந்த கல்லூரி வளாகத்திலேயே முன்னணி நிறுவனங்களால் நடத்தப்படுகின்ற வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்துகொண்டு, பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்கு போகக்கூடிய அளவிற்கு இளைஞர்களுடைய திறன் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்காட்சி

முன்னதாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களால் அமைக்கப்பட்ட திறன் சாதனை கண்காட்சியை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

விழாவில் பொன்முடி, சி.வி.கணேசன் உள்ளிட்ட அமைச்சர்கள், மேயர் பிரியா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தரேஷ் அகமது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யா, நான் முதல்வன் திட்ட முதன்மை செயல் அலுவலர் ஜெயப்பிரகாசன், தென்னிந்திய தொழிற்கூட்டமைப்பு தலைவர் சங்கர் வானவராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்