திருவிழா நடத்த அனுமதி கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை

Update: 2022-07-26 15:39 GMT


அவினாசி அருகே கருப்பராயன் கோவிலில் திருவிழா நடத்த அனுமதி கோரி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

தாலுகா அலுவலகம் முற்றுகை

அவினாசி அருகே கோவில் திருவிழா நடத்த அனுமதி அளிக்குமாறு ராயர்பாளையம், வடுகபாளையம், சுள்ளிப்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 250 பெண்கள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் அனைவரும் முத்தரையர் சமுதாயத்தில் உள்ள போத்தங்குலம் என்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். எங்களுக்கு போத்தம்பாளையம் பெரிய கருப்பராயன் கோவிலில் உரிமையுள்ளது. எங்களது போத்தங்குல மக்கள் திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள நூற்றுகணக்கான கிராமங்களில் வசித்து வருகிறோம். எங்களது 3 ஆயிரம் ஆட்டுக்கிடாய்களை நேர்த்திக்கடனுக்காக வளர்த்து வருகிறோம். தற்போது போத்தம்பாளையம் பெரிய கருப்புராயன் கோவிலில் சாமி சாட்டி ஆடி திருவிழா நடக்க இருந்த நிலையில் கோவில் பூசாரி திருவிழா நடத்த தாசில்தார் தடை விதித்துள்ளார் எனக்கூறி கோவிலுக்கு வர மறுத்துவிட்டார்.

அனுமதி வழங்க வேண்டும்

குறிப்பாக 4,5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டும் கோவில் திருவிழா நடத்தக்கூடாது என்று தடுத்து வருகின்றனர். இது நியாயம் இல்லை. நாங்கள் சாமிக்காக நேர்ந்துவிட்ட ஆட்டுக்கிடாய்கள் 5 வருடங்களை கடந்துவிட்டது. இனிமேலும் அவைகளை எங்களால் வளர்க்க இயலாது.

கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தால் குடும்பத்தில் தீமை நடக்கும் என்ற அச்சம் எங்களுக்குள் எழுந்துள்ளது. எனவே கோவில் திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்