முத்தாரம்மன் கோவிலில்ரூ.1 லட்சம் நகைகள் கொள்ளை
சாத்தான்குளம் அருகே முத்தாரம்மன் கோவிலில் ரூ.1 லட்சம் நகைகள் கொள்ளை நடந்துள்ளது. மற்றொரு கோவிலில் கொள்ளை முயற்சியும் நடந்தேறியுள்ளது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே கீழகுளம் கிராமத்தில் முத்தாரம்மன் கோவிலில் மர்ம நபர் புகுந்து ரூ.1 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். மற்றொரு கோவிலில் கொள்ளை முயற்சியும் நடந்துள்ளது.
கோவிலில் கொள்ளை
சாத்தான்குளம் அருகேயுள்ள கீழகுளம் கிராமத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் கடந்த 21-ந் தேதி இரவு பூஜாரி கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். அன்று நள்ளிரவில் மர்ம நபர் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். கோவில் கருவறையில் உள்ள முத்தாரம்மன் கழுத்தில் அணிந்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொட்டு தாலி மற்றும் தலையில் அணிந்திருந்த வெள்ளி கிரிடத்தை கொள்ளையடித்து கொண்டு வெளியேறியுள்ளார்.
மற்றொரு கோவிலில்...
பின்னர் அந்த மர்ம நபர் இரும்பு கம்பியுடன் அருகிலுள்ள கீழகொம்பன்குளம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற மர்மநபர், கோவில் உள்புற கதவை இரும்பு கம்பியால் உடைக்க முயற்சித்துள்ளார். பலமணிநேரம் முயற்சித்தும் கதவை உடைக்க முடியாததால் மர்ம நபர் வெளியே தப்பி வந்துள்ளார். அந்த கோவில் அருகிலுள்ள ஒரு வீடு முன்பு கட்டப்பட்டு இருந்த ஆட்டை திருடி கொண்டு அந்த நபர் தப்பி சென்று விட்டார்.
மர்மநபருக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் அந்த கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கீழகொம்பன்குளம் கோவிலில் ஏற்கனவை 2 முறை கொள்ளை சம்பவம் நடந்ததால், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட மர்ம நபர் கோவில்களை குறித்து வைத்து தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 2 சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள மர்ம நபரை தேடிவருகின்றனர்.