முத்தமிழை தி.மு.க. ஆட்சி வளர்க்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழை தி.மு.க. ஆட்சி வளர்க்கிறது என்று சென்னையில் நடந்த விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் 43-வது வழுவூரார் நாட்டியம் மற்றும் இசை விழா நடந்தது. இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் வழுவூரார் விருதை ஏ.கன்னியாகுமரிக்கு வழங்கினார்.
விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
வாரிசு
நாட்டிய உலகமாக இருந்தாலும், இசை உலகமாக இருந்தாலும் அதில் வழுவூரார் குடும்பத்துக்கு மகத்தான இடம் உண்டு. குடும்பம் குடும்பமாக, தலைமுறை தலைமுறையாக என்று சொல்வதைப்போல, இதை சொல்லுகிறபோது, அரசியலில் இருந்தால் வாரிசு என்று சொல்லி விடுவார்கள். அதை விமர்சனமும் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி, அதையெல்லாம் மீறி இன்றைக்கு இசைக்கும், நாட்டியத்துக்கும் தொண்டாற்றிய ஒரு குடும்பமாக வழுவூராருடைய குடும்பம் விளங்கி கொண்டிருக்கிறது.
பத்மினி, பத்மா சுப்பிரமணியம், வைஜெயந்தி மாலா, சித்ரா விஸ்வேஸ்வரன் என அவர் உருவாக்கிய கலைஞர்களும் மாபெரும் கலைஞர்களாக நாட்டிலே வலம் வந்தவர்கள். இப்படி கலைஞர்களை உருவாக்கக்கூடிய பரந்த உள்ளமானது அனைவருக்கும் வந்தாக வேண்டும். என்னுடைய மகள் செந்தாமரை நாட்டிய கலா சாம்ராட் கலைமாமணி வழுவூர் சாம்ராஜிடம் நாட்டியம் கற்றவர். அதிலே எனக்கு உள்ளபடியே பெருமை.
முத்தமிழை வளர்க்கும் ஆட்சி
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் வளர்க்கும் ஆட்சியாக தி.மு.க.வின் ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. கலைகள் என்பவை தமிழ் பண்பாட்டை காலம், காலமாக வளர்த்தெடுக்கும் பணியை செய்து வருகின்றன. தமிழும், தமிழ்நாடும் பல்லாயிரம் ஆண்டு காலம் நின்று நிலைக்க இத்தகைய கலை இலக்கியங்கள் தான் அடிப்படையான காரணம். எத்தனையோ படையெடுப்புகளை தமிழ்நாடு சந்தித்துள்ளது. அத்தனை படையெடுப்புகளையும் தாங்கி நின்று செழிக்க நமது கலை, இலக்கியங்கள்தான் காரணம்.
இந்திய விடுதலைக்காக வழுவூரார் நாட்டிய கலையை அன்றே பயன்படுத்தியதைப்போல இன்று இருப்பவர்களும் தமிழை காக்கவும், தமிழ்நாட்டை காக்கவும் தங்கள் கலையை பயன்படுத்தவேண்டும். புதிய, புதிய கலைஞர்கள் உருவாகுவதைப்போல புதிய, புதிய பாடல்களும் இந்த மேடைகளில் ஒலிக்க வேண்டும். நவீன கலையில் நவீன கருத்துகள், அறிவுப்பூர்வமான கருத்துகள், பகுத்தறிவு கருத்துகள் சமூக மேன்மைக்கும், மக்களை நல்வழிப்படுத்தும் கருத்துகள் இடம் பெற வேண்டும். நவீன வடிவங்களை மட்டுமல்ல, நவீன எண்ணங்களையும் இந்த கலையில் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டோர்
விழாவில், மயிலை த.வேலு எம்.எல்.ஏ., சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, இந்து குழுமத்தின் இயக்குனர் என்.ரவி, டாக்டர் நல்லி குப்புசாமி, பாரதிய வித்யா பவன் இயக்குனர் கே.என்.ராமசாமி, கிளவ்லேண்ட் வி.வி. சுந்தரம், வழுவூரார் பரதநாட்டிய அகாடமியின் செயலாளர் வழுவூர் சாமராஜன் குமாரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.