ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு இசை போட்டி
கம்பம் வட்டார ஒலிபெருக்கி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கம்பத்தில், ஏகலூத்து சாலையில் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கான இசை போட்டி நேற்று தொடங்கியது.;
கம்பம் வட்டார ஒலிபெருக்கி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கம்பத்தில், ஏகலூத்து சாலையில் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கான இசை போட்டி நேற்று தொடங்கியது. இதில், தேனி, மதுரை மாவட்டத்தில் இருந்து ஒலிபெருக்கி உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, தங்களது ஒலிபெருக்கிகளை திறந்தவெளியில் அமைத்து பாடல்களை ஒலிபரப்பினர்.
அப்போது எந்த ஒலிபெருக்கிகளில் இருந்து அதிக சத்தம் மற்றும் இசை தெளிவாக ஒலித்ததோ, அந்த ஒலிபெருக்கி உரிமையாளர்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. நாக் அவுட் அடிப்படையில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலிடம் பிடிக்கும் ஒலிபெருக்கி உரிமையாளருக்கு ரூ.21 ஆயிரம், 2-ம் இடம் பிடிப்பவருக்கு ரூ.15 ஆயிரத்து 500, 3-ம் இடம் பிடிப்பவருக்கு ரூ.10 ஆயிரத்து 500, 4-ம் இடம் பிடிப்பவருக்கு ரூ.5 ஆயிரத்து 500 பரிசாக வழங்கப்பட உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டி, இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது.
இதுகுறித்து ஒலிபெருக்கி உரிமையாளர் சங்க நிர்வாகி கூறும்போது, பொதுமக்களை கவரும் வகையில் இந்த இசை போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியில் கலந்துகொள்ளும் ஒலிபெருக்கி உரிமையாளர்கள் தங்களது ஒலிபெருக்கிகளை திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ள பந்தய எல்லையில் கட்டி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும். இதில் அதிக தூரத்திற்கு தெளிவான பாடல் கேட்கிறது என்பதை வைத்து வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றார்
இதற்கிடையே ஒலிபெருக்கி இசை போட்டியை காண கம்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை ஏராளமான இளைஞர்கள் போட்டி நடந்த இடத்துக்கு அதிக அளவில் வருகை தந்தனர்.