மூலனூரில் முருங்கை வரத்து தொடங்கியதால் நேற்று மூலனூர் வார சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.80-விற்பனையானது.
முருங்கைக்காய் வரத்து
கன்னிவாடி, மூலனூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முருங்கைக்காய் வரத்து தொடங்கியதால் முருங்கை விலை உயர்ந்துள்ளது. இது மேலும் உயரவாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மூலனூர், கன்னிவாடி பகுதிகளில் தனியார் கொள்முதல் நிலையங்களில் முருங்கைக்காய் கொள்முதல் செய்வது வழக்கம். இந்த சந்தைக்கு மூலனூர், கன்னிவாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த முருங்கைக் காய்களை விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனூர் ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து முருங்கைக் காய்களை வாங்கி செல்கின்றனர்.
கிலோ ரூ.80-க்கு விற்பனை
பின்னர் இதை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். வடமாநில வியாபாரிகள் முருங்கைக்காய் கொள்முதல் செய்வதை தொடங்கியுள்ளதால் மூலனூர் பகுதிகளில் தற்போது முருங்கை வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக விலை உயரத் தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் ரூ.70- க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் இந்த வாரம் உயர்ந்தது. செடி முருங்கை, மரம் முருங்கை, கரு முருங்கை என அனைத்தும் சராசரியாக ரூ.80-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. விலை உயர தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வாரம் மூலனூர் வாரச்சந்தைக்கு சுமார் 3 டன் முருங்கைக்காய்கள் விற்பனைக்காக வந்திருந்தது. அதன் மதிப்பு ரூ.24 லட்சம் ஆகும்.