மூர்த்தி யானைக்கு உடல் நலக்குறைவு
முதுமலையில் மூர்த்தி யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
கூடலூர்,
முதுமலையில் மூர்த்தி யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூர்த்தி யானை
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு, அபயாரண்யம் முகாம்களில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிறந்த சில மாதங்களில் தாய் யானையை பிரிந்து தவிக்கும் குட்டிகளை வனத்துறையினர் மீட்டு முகாம்களில் வைத்து பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். பின்னர் சிறு வயது முதலே கும்கி பயிற்சி அளித்து பராமரிக்கப்படுகிறது.
தொடர்ந்து ரோந்து செல்லுதல், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பணிகளில் வளர்ப்பு யானைகள் ஈடுபடுத்தப்படுகிறது. பின்னர் 58 வயதை அடைந்தவுடன் பணி ஓய்வு அளிக்கப்படுகிறது. இதில் 60 வயதான மூர்த்தி வளர்ப்பு யானை பணி ஓய்வு பெற்றுள்ளது. இந்தநிலையில் மூர்த்தி யானைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அதன் உடலில் பல இடங்களில் காயங்களும் இருக்கிறது.
தீவிர சிகிச்சை
இதனால் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் மூர்த்தி யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன் உடலில் உள்ள காயங்களுக்கு பச்சிலை மருந்துகள் தினமும் காலை, மாலை வேளையில் பூசப்பட்டு வருகிறது. மேலும் மூர்த்தி யானை ஆரோக்கியமாக இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கேரளா மற்றும் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசம் செய்து வந்த மக்னா யானை பலரை கொன்று எள்ளது. இதனால் 1998-ம் ஆண்டு மயக்க ஊசி செலுத்தி அந்த யானை பிடிக்கப்பட்டது. அப்போது அதன் உடலில் பல இடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் இருந்தது. தொடர் சிகிச்சைக்கு பிறகு குண்டுகள் அகற்றப்பட்டு கும்கியாக மாற்றப்பட்டது. அந்த யானை மூர்த்தி என பெயரிட்டு அழைக்கப்பட்டது. தற்போது வயது முதிர்வு காரணமாக உடல் நலன் பாதிக்கப்பட்டது. தொடர் சிகிச்சையால் நல்ல ஆரோக்கியமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.