தொழிலாளி அடித்துக்கொலை; மர்மநபர்கள் கொன்றதாக நாடகமாடிய மனைவி, மகன் கைது

கண்டமனூர் அருகே தொழிலாளியை அடித்துக்கொலை செய்துவிட்டு, மர்மநபர்கள் கொன்றதாக நாடகமாடிய மனைவி, மகன் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-30 17:35 GMT

கண்டமனூர் அருகே தொழிலாளியை அடித்துக்கொலை செய்துவிட்டு, மர்மநபர்கள் கொன்றதாக நாடகமாடிய மனைவி, மகன் கைது செய்யப்பட்டனர்.

கூலித்தொழிலாளி

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முருகேஸ்வரி (48). இவர்களுக்கு பூங்கொடி, ஜோதிலட்சுமி என்ற 2 மகள்களும், காளிதாஸ் (29) என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களும் திருமணம் முடிந்து, வெளியூர்களில் வசித்து வருகின்றனர். காளிதாஸ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

மது போதைக்கு அடிமையான முனியாண்டி குடும்ப பிரச்சினை தொடர்பாக தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு காளிதாஸ் விடுமுறைக்காக ஜி.உசிலம்பட்டிக்கு வந்திருந்தார்.

அடித்துக்கொலை

நேற்று முன்தினம் இரவு முனியாண்டி வழக்கம்போல் மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் இருந்த முருகேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனை பார்த்த காளிதாஸ், தனது தந்தை முனியாண்டியை கண்டித்தார். அப்போது முனியாண்டி, காளிதாசை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ், தனது தந்தையை தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த முனியாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகேஸ்வரியும், காளிதாசும் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பெரிய பிரச்சினை ஏற்பட்டு விடும் என்று எண்ணியதுடன், கொலையை மறைக்க முடிவு செய்தனர்.

நாடகமாடிய தாய்-மகன்

அதன்படி நள்ளிரவு 12 மணி அளவில் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாதபோது முனியாண்டியின் உடலை தங்களது வீட்டின் முன்பு சாலையில் போட்டனர்.

சிறிது நேரத்தில் தாயும், மகனும் அபயகுரல் எழுப்பினர். முனியாண்டியை மர்மநபர்கள் கொலை செய்து, உடலை இங்கு வந்து போட்டுவிட்டதாக கூறி கதறி அழுதனர். இதனை கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக கண்டமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முனியாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

மேலும் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், முனியாண்டியை கொலை செய்யும் அளவுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அவரது மனைவி மற்றும் மகன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து முருகேஸ்வரி, காளிதாசை கண்டமனூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் முனியாண்டியை கொலை செய்துவிட்டு, அவரை மர்மநபர்கள் கொன்றதாக நாடகமாடியதை தாயும், மகனும் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து, காளிதாஸ் மற்றும் அவரது தாய் முருகேஸ்வரியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்