திண்டுக்கல் அருகே வாலிபரை கொலை செய்தது ஏன்?; கைதான 3 பேர் வாக்குமூலம்

திண்டுக்கல் அருகே வாலிபரை கொலை செய்தது ஏன் என்பது குறித்து கைதான 3 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2022-07-10 19:31 GMT

திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த இருளப்பன் மகன் குட்டிமயில் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியில் உள்ள மயானம் அருகே கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் காமாட்சிபுரம் அருகே கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த வீரமணி (24), சேசு நசரேத் (30), தமிழழகன் (28) என்பதும், குட்டிமயிலை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு போலீசாரிடம் பிடிபட்ட 3 பேரும் வாக்குமூலம் அளித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கைதான வீரமணிக்கும், குட்டிமயிலுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வீரமணி, சேசுநசரேத், தமிழழகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து பொன்மாந்துறை புதுப்பட்டி மயானம் அருகே மது அருந்தினர். அப்போது அங்கு வந்த குட்டிமயில் மதுபோதையில் கத்தியை காட்டி அவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் குட்டிமயிலை கத்தியால் குத்திக்கொலை செய்ததாக தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்