ஓமலூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை-மகனிடம் போலீசார் விசாரணை

ஓமலூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளியை கொன்ற மகனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-06-13 22:37 GMT

ஓமலூர்:

ஓமலூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளியை கொன்ற மகனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தகராறு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செல்லப்பிள்ளை குட்டை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் விஷ்ணுகுமார் (25). மாரியப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு குடிபோதையில் மாரியப்பன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கொலை

இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணுகுமார், அங்கிருந்த செங்கல்லை எடுத்து, மாரியப்பனை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த விஷ்ணுகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஷ்ணுகுமாரை பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தந்தையை மகனே கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்