ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டார்.
முப்பெரும் விழா
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் செங்கப்பள்ளி ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருக்குறள் முற்றோதிய மாணவ-மாணவிகளுக்கு காசோலையும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு பயணச்சலுகை, நலிவடைந்த குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள் வரவேற்றார். இதில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், ஊத்துக்குளி ஒன்றியக் குழு பெருந்தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி, தாசில்தார் தங்கவேல், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நலத்திட்ட உதவி
விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு விழா சிறப்புரையாற்றினார். விழாவில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திருக்குறள் முற்றோதிய மாணவ-மாணவிகள் 5 பேருக்கு தலா ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையும், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் 39 பேருக்கு பயணச் சலுகை ஆணையும் வழங்கினார். மேலும் உடுமலை பகுதியைச் சேர்ந்த நலிவடைந்த 8 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டாவையும் வழங்கினார். முன்னதாக செங்கப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காடபாளையம் சாலையிலிருந்து அழகு நாச்சியம்மன் திருமண மண்டபம் வரை ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அண்ணாமலையார் நகர் மெயின் வீதியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து தார் சாலை அமைக்கும் பூமி பூஜையிலும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கஸ்தூரி பாளையம் ஊராட்சி தலைவர் பழனிச்சாமி, செங்கப்பள்ளி ஊராட்சி தலைவர் சாந்தாமணி துரைசாமி, மத்திய ஒன்றிய செயலாளர் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் கொண்ட சாமி, துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.