ஆணையாளர் இல்லாததால் பில்கள் தேக்கம்- தேவகோட்டை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்
ஆணையாளர் இல்லாததால் பில்கள் தேக்கம் அடைந்து உள்ளன என்று தேவகோட்டை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார் தெரிவித்து உள்ளார்.;
தேவகோட்டை,
ஆணையாளர் இல்லாததால் பில்கள் தேக்கம் அடைந்து உள்ளன என்று தேவகோட்டை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார் தெரிவித்து உள்ளார்.
அவசர கூட்டம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியின் அவசர கூட்டம் தலைவர் கா.சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரமேஷ், மேலாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
துணைத்தலைவர்:குப்பைகளை அள்ளுவதில் பணியாளர்கள் தொய்வில்லாமல் அனைவரும் பணிக்கு வர வேண்டும். 2019-ம் ஆண்டுக்கான வரியை தற்போது வரி உயர்வு உள்ளபடி வசூல் செய்வதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
கவுன்சிலர் பிச்சையம்மாள்:- எனது வார்டுகளில் உள்ள பொது கழிப்பிட கட்டிடத்தில் போர்வெல் சரி செய்ய வேண்டும்.
பணி அதிகரிப்பு
பெரி.பாலா (தி.மு.க): நகராட்சி பணியாளர்கள் வரி வசூல் செய்ய காலையில் செல்வதால் அலுவலகப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இதனால் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வரி வசூல் செய்தால் நல்லது.
தலைவர் சுந்தரலிங்கம்:கொரோனா காலத்தில் வரி வசூல் செய்யாததால் தற்போது நிலுவையில் உள்ள பாக்கிகளை வசூல் செய்ய வேண்டியதின் காரணமாக பணியாளர்களின் பணி அதிகரித்து உள்ளது. இன்னும் சில நாட்களில் சரியாகிவிடும்.
கவுன்சிலர் சுதா:தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு வரும் போது உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளது.
தலைவர் சுந்தரலிங்கம்:தனியாரிடம் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். இது குறித்து கவனம் செலுத்தப்படும்.
கவுன்சிலர் அய்யப்பன்:தற்பொழுது ஆணையாளர் இல்லாததால் நகராட்சியில் பில் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திடுவது தேங்கி உள்ளது.
தலைவர் சுந்தரலிங்கம்: கமிஷனர் யார்? என்பதை அரசு முடிவு செய்யும்.
வார்டுகளுக்கு...
கவுன்சிலர் அனிதா:115 ஒப்பந்த பணியாளர்கள் பிரித்து தற்போது எதன் அடிப்படையில் வார்டுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்?
சுகாதார ஆய்வாளர்:தள்ளுவண்டியில் செல்லும் பணியாளர்கள் சுமார் 250 வீடுகளிலும், பேட்டரி வண்டியில் செல்லும் பணியாளர்கள் சுமார் 400 வீடுகளிலும், மினி வேனில் செல்லும் பணியாளர்கள் சுமார் 800 வீடுகளிலும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் உள்ளனர்.
தி.மு.க. கவுன்சிலர் பெரி.பாலா:- நகராட்சியில் அனைத்து வார்டுகளில் உள்ள பொது சுகாதார கழிப்பறை கட்டிடங்களை முழுமையாக பராமரிப்பு செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
தலைவர் சுந்தரலிங்கம்:இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.