திருச்சியில் காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் கைது
திருச்சியில் காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஓய்வு பெற்ற ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்
திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் நாகராஜன் (வயது 64). இவர் மத்திய ரெயில்வே பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் பெயரில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் 1,600 சதுர அடியில் காலி மனை ஒன்று உள்ளது. அந்த காலி மனையில் நாகராஜன் வீடு கட்ட நினைத்தார்.
இதற்காக காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள மாநகராட்சியின் 48-வது வார்டு வரி வசூல் மையத்திற்கு கடந்த 14-ந்தேதி நாகராஜன் சென்றார். பின்னர் அங்கிருந்த பில் கலெக்டர் ராஜலிங்கத்திடம் (54) வரி நிர்ணயம் செய்ய விவரம் கேட்டுள்ளார்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
அதற்கு, காலி மனை வரிவிதிப்பு தொடர்பான விண்ணப்பத்தை கொடுத்த ராஜலிங்கம், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து மீண்டும் வந்து தன்னை சந்திக்குமாறு கூறினார். இதைத்தொடர்ந்து, நாகராஜன் கடந்த 23-ந்தேதி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சுப்பிரமணியபுரத்தில் உள்ள வரிவசூல் மையத்திற்கு சென்று ராஜலிங்கத்திடம் கொடுத்தார்.
விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட ராஜலிங்கம், வரிவிதிப்பு செய்ய தனக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை, கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் என்று நாகராஜன் கூறவே, ரூ.2 ஆயிரம் குறைத்து ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வரி நிர்ணயம் செய்து கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன், இதுகுறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
கையும், களவுமாக கைது
அதன்பேரில், ராஜலிங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூ.5 ஆயிரம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை நாகராஜனிடம் கொடுத்து, அவற்றை லஞ்சம் கேட்ட ராஜலிங்கத்திடம் கொடுக்கும்படி கூறினர். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 12 மணி அளவில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள வரிவசூல் மையத்துக்கு சென்ற நாகராஜன், ரசாயனம் தடவிய பணத்தை ராஜலிங்கத்திடம் லஞ்சமாக கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார், ராஜலிங்கம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவருடைய அலுவலகம் மற்றும் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
ரூ.25 ஆயிரம் சிக்கியது
இந்த சோதனையின் போது அவருடைய இருசக்கர வாகனத்தில் கணக்கில் வராத ரூ.25 ஆயிரம் இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த பணத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள். பின்னர், கைது செய்யப்பட்ட ராஜலிங்கத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.