வீடுகள், கட்டிடங்கள் கட்ட நகராட்சி நிர்வாகம் அனுமதி

வீடுகள், கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதியை நகராட்சி நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.;

Update: 2022-09-30 18:45 GMT

கூடலூர், 

வீடுகள், கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதியை நகராட்சி நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நகராட்சி கூட்டம்

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அரங்கில் மன்ற கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், பொறியாளர் பார்த்தசாரதி, பணி மேற்பார்வையாளர் ஆல்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

கவுன்சிலர்கள் உஸ்மான், அனூப், சகீலா:-

குடிநீர் பம்ப் ஆபரேட்டர்களுக்கு மாத சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். இதுசம்பந்தமாக ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால், இதுவரை சம்பளம் உயர்த்தப்படவில்லை.

ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர்:- சம்பள உயர்வு அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

கவுன்சிலர் ராஜேந்திரன்:- வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள எந்த தடையும் வந்தால் நகராட்சி ஆணையாளருக்கு அனைத்து கவுன்சிலர்களும் முழு ஒத்துழைப்பு அளிப்போம். எனவே, வளர்ச்சி பணிகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனுமதி வழங்க வேண்டும்

கவுன்சிலர் அனுப், சத்தியசீலன், வர்கிஷ் உள்பட பெரும்பாலான கவுன்சிலர்கள் கூறியதாவது:- நகராட்சி பகுதியில் புதிய வீடுகள், கட்டிடங்கள் கட்டுவதற்கு கலெக்டர் தலைமையிலான கமிட்டியிடம் அனுமதி பெற வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக விண்ணப்பிக்கும் போது மக்களுக்கு இதுவரை முறையாக அனுமதி கிடைக்கவில்லை.

எனவே, பழைய நடைமுறையில் உள்ளது போல் வீடுகள் கட்டிடங்கள் கட்ட நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை தீர்மானமாக நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். நகராட்சி தலைவர் பரிமளா:- மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

கவுன்சிலர் ஷகிலா:- கோல்டன் அவென்யூ பகுதியில் பாலம் கட்டாமல் உள்ளது. இதனால் தனியார் நிலம் வழியாக தற்காலிகமாக நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. பலமுறை நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் பாலம் கட்ட வில்லை என கூறி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றார்.

புதிய டெண்டர் விட நடவடிக்கை

தற்காலிக பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதி அளித்தார். இதேபோல் பெரும்பாலான கவுன்சிலர்கள் நகருக்குள் கால்நடைகள், தெரு நாய்கள் அதிகளவு சுற்றி திரிகிறது. இதைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.

கவுன்சிலர் உஸ்மான்:- தூய்மை பணியாளர்கள் நியமனம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆணையாளர்:- நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெறப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் வருகிற டிசம்பர் மாதம் தூய்மை பணியாளர்கள் நியமனம் குறித்து புதிய டெண்டர் விட உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்