ஆக்கிரமிப்பால் சுருங்கிய முல்லைப்பெரியாறு
லோயர்கேம்பில் இருந்து வைகை அணை வரை முல்லைப்பெரியாற்றின் கரையினை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் முல்லைப்பெரியாறு நாளுக்கு நாள் சுருங்கி கொண்டே செல்கிறது.;
முல்லைப்பெரியாறு அணையின் பாசனம் மூலம் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன. மேலும் மறைமுக பாசனம் மூலம் தென்னை, வாழை, திராட்சை மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் லோயர்கேம்பில் இருந்து வைகை அணை வரை முல்லைப்பெரியாற்றின் கரையினை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் முல்லைப்பெரியாறு நாளுக்கு நாள் சுருங்கி கொண்டே செல்கிறது.
குறிப்பாக குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கம்பம், புதுப்பட்டி, தேனி ஆகிய பகுதிகளில் ஆற்றின் கரைகளை ஆக்கிரமிப்பு செய்து வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறையினரும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மேலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.