பிடாரியம்மன் கோவிலில் முளைப்பாரி விழா
பிடாரியம்மன் கோவிலில் முளைப்பாரி விழா நடைபெற்றது.;
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் கோவில் முளைப்பாரிக்கு விதை கொடுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதையடுத்து கோவில் முளைப்பாரிக்கு விதை தூவிய பிறகு கிராமத்தில் உள்ள அனைவரும் ஒவ்வொரு வீட்டிலும் மண் சட்டிகள் உள்பட பல்வேறு பாத்திரங்களில் நவதானிய விதைகள் தூவி வீட்டுக்குள்ளேயே வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். பின்னர் முளைப்பாரியை தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் கிராமமக்கள் நேற்று மாலை ஊர்வலமாக தூக்கி சென்று மண்ணடி திடல், பிடாரியம்மன் கோவில் ஆகியவற்றை சுற்றி பெரியகுளத்திற்கு வந்தனர். பின்னர் முளைப்பாரியை குளத்தில் விட்டனர். மேலும் முளைப்பாரியுடன் கொண்டு வந்த படையல் பொருட்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து படையலிட்டு வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருகிற 9-ந் தேதி மது எடுப்பு திருவிழா நடக்கிறது.