மறுகுடியமர்வு திட்டத்துக்கு தனி அலுவலர்களை நியமிக்க முதுமலை ஊராட்சி மக்கள் கோரிக்கை

மறுகுடியமர்வு திட்டத்துக்கு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என முதுமலை ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-07-25 14:00 GMT

கூடலூர்,

மறுகுடியமர்வு திட்டத்துக்கு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என முதுமலை ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மறு குடியமர்வு திட்டம்

கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சி புலிகள் காப்பக வனத்தின் கரையோரம் உள்ளது. இங்கு பல தலைமுறைகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட வனம் என்பதால் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஊராட்சி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைதொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு பொதுநல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டது.

அதன்படி ஊராட்சி மக்களுக்கு மாற்றிடம் வழங்கி மறு குடியமர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஒரு குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அல்லது மாற்றிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

இதில் 670 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதில் பெரும்பாலான குடும்பங்கள் பணம் மற்றும் மாற்றிடம் பெற்று பந்தலூர் தாலுகா சன்னக்கொல்லியில் மறுகுடியமர்த்தப்பட்டனர்.

கலந்தாய்வு கூட்டம்

மீதமுள்ள குடும்பங்களை மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் மறுகுடியமர்த்துவதற்கான கலந்தாய்வு கூட்டம் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் தலைமை தாங்கினார். தாசில்தார் சித்தராஜ் முன்னிலை வைத்தார். கூட்டத்தில் முதுமலை ஊராட்சி தலைவர் கோமதி, மறு குடியமர்வு திட்ட கமிட்டி நிர்வாகிகள் கங்காதரன், சுரேஷ், வக்கீல் சுகுமாறன் உள்பட ஊராட்சி மக்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மறு குடியமர்வு திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மாற்றிடத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும். தேர்வு செய்யப்பட்டு உள்ள பயனாளிகளுக்கு பண பலன்கள் அல்லது மாற்றிடம் உடனடியாக வழங்க வேண்டும் என்று மக்கள் கூறினர். அதற்கு கலெக்டர் தலைமையிலான மாவட்ட கமிட்டியின் ஒப்புதல் பெற்று விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

தனி அலுவலர்கள்

கூட்டத்தில் ஊராட்சி மக்கள் கூறும்போது, 2007-ம் ஆண்டு தொடங்கிய மாற்றிடம் வழங்கும் திட்ட பணிகள் தொடர்ந்து தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தில் அதிகாரிகளை குறை கூறவில்லை. தொடர்ந்து பல்வேறு அலுவலக பணிகள் இருப்பதால் மாற்றிடம் வழங்கும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இதனால் இத்திட்டத்துக்காக தனி அலுவலர்களை அரசு நியமிக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்