கடம்பூர்-குன்றி வனச்சாலையில் யானைகள் நடமாட்டம்;மாலையில் இருசக்கர வாகனங்கள் செல்வதை தவிர்க்க வேண்டுகோள்

கடம்பூர்-குன்றி வனச்சாலையில் யானைகள் நடமாடுவதால் மாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்கவேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Update: 2022-12-28 21:21 GMT

டி.என்.பாளையம்

கடம்பூர்-குன்றி வனச்சாலையில் யானைகள் நடமாடுவதால் மாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்கவேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

யானை மிதித்தது

கடம்பூர் அருகே உள்ள கரளயம், ஏலஞ்சி, புதூர்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி (வயது 52). கடந்த வாரம் விவசாயி பழனிச்சாமி வேலை முடிந்து உறவினருடன் மோட்டார்சைக்கிளில் குன்றியில் இருந்து கடம்பூருக்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது அஞ்சனை பிரிவு என்ற இடத்தில் திடீரென வெளியே வந்த காட்டு யானை பழனிச்சாமியை துதிக்கையால் பிடித்து தூக்கி காலால் போட்டு மிதித்து கொன்றது. உடன் சென்றவர்கள் ஓடி உயிர் தப்பினர்.

கடம்பூர்- குன்றி செல்லும் வனச்சாலையில் அஞ்சனை பிரிவு அருகே யானைகள் அடிக்கடி நடமாடுகின்றன. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சிலர் ஆபத்தை உணராமல் செல்போனில் செல்பி எடுக்கிறார்கள்.

தவிர்க்க வேண்டும்

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'மழை காலங்களில் யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு சாலை ஓரத்தில் இருக்கும் மூங்கில் பயிர்களை தேடி வரும். குறிப்பாக கடம்பூர்-குன்றி சாலையில் சில நாட்களாக யானைகள் சுற்றித்திரிகின்றன. மாலை நேரங்களில் புதர் மறைவில் யானைகள் நிற்கும்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு தெரியாது. திடீரென தாக்க ஓடிவரும். எனவே மாலை நேரங்களில் குன்றி-கடம்பூர் சாலையில் செல்லவேண்டாம். இதேபோல் யானைகளை பார்க்கும் சிலர் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கிறார்கள். இதுபோன்ற செயல்களை தவிர்க்கவேண்டும்' என்றார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்