புதிய டீசல் என்ஜின் மூலம் மலைரெயில் சோதனை ஓட்டம்
ரூ.9¼ கோடியில் தயாரிக்கப்பட்ட புதிய டீசல் என்ஜின் மூலம் மலைரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.;
ஊட்டி
ரூ.9¼ கோடியில் தயாரிக்கப்பட்ட புதிய டீசல் என்ஜின் மூலம் மலைரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மலை ரெயில்
மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது. ஊட்டியில் கோடை சீசன் நடைபெறும்போதும், தொடர் விடுமுறை நாட்கள் வரும்போதும் மலை ரெயிலில் சுற்றுலா பயணிகளின் அதிக அளவில் பயணிக்கின்றனர்.
புதிய என்ஜின்
இந்த மலை ரெயில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான ரெயில் பாதையில், தண்டவாளங்களுக்கு நடுவில், ரேக் பார் அமைக்கப்பட்டு, பல்சக்கரத்தில் இயங்கி வருகிறது. தற்போது பர்னஸ் ஆயிலால் இயங்கும் 4 எக்ஸ்-கிளாஸ் என்ஜின்கள் மூலம், மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு திருச்சி பொன்மலை பணிமனையில், புதிதாக ரூ.9 கோடியே 30 லட்சம் செலவில் 37401 எண் கொண்ட முதல் எக்ஸ் கிளாஸ் டீசல் என்ஜின் சோதனை ஓட்டம் ஏற்கனவே 4 முறை நடத்தப்பட்டது.
அது வெற்றிபெற்ற நிலையில் நேற்று பயணிகளுக்கான மலை ரெயிலில் சோதனை ஓட்டத்திற்காக இயக்கப்பட்டது. 4 பெட்டிகளில் சுற்றுலா பயணிகளுடன் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கப்பட்டது. இதில் சென்ற சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.