பொன்னேரி அருகே வாகன ஓட்டிகள் அச்சம்
பொன்னேரி அருகே நடுரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.;
பொன்னேரி அடுத்த சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ளது இருளிப்பட்டி சத்திரம் கிராமம். இந்த கிராமத்தின் வழியாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மீஞ்சூர் ஜெகநாதபுரம் சாலை செல்கிறது. இந்த சாலையை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய சாலையாக இருந்துள்ளது.
இந்த சாலையின் ஓரத்தில் குடியிருப்புகள் இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மீஞ்சூர் ஜெகநாதபுரம் சாலையில் நேற்று திடீரென பள்ளம் ஏற்பட்டது.
இந்த திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையில் 100 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு இருந்துள்ளது.
இதை சரியாக மூடாமல் சாலை அமைத்துள்ளனர். இதனால் பள்ளம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், வாகனங்கள், பொதுமக்கள் அதிகமாக செல்லும் இந்த சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.