மோட்டார் சைக்கிள்கள்-டிராக்டர் மோதல்; 3 பேர் படுகாயம்
காட்டுமன்னார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள்-டிராக்டர் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
காட்டுமன்னார்கோவில்,
அரியலூர் மாவட்டம் குட்டகரை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 50). இவர் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று வேலை முடிந்ததும் ரவிச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் குட்டகரைக்கு புறப்பட்டார். குருங்குடி மெயின்ரோடு அருகே வந்த போது எதிரே வந்த டிராக்டர் ரவிச்சந்திரன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் இன்னொரு மோட்டார் சைக்கிள் மீதும் அடுத்தடுத்து மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் மற்றும் இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த திருநாவுக்கரசு(55), ஆதித்யா(19) ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் போில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.