மெரினாவில் மோட்டார் சைக்கிள் பந்தயம்; கல்லூரி மாணவர் கைது
சென்னை மெரினாவில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி பந்தயத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசாரிடம் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
சென்னையில் குற்றதடுப்பு நடவடிக்கையாக கடந்த சில நாட்களாக தினமும் இரவு விடிய-விடிய வாகன சோதனை நடத்தப்படுகிறது. போக்குவரத்து போலீசாரும், சட்டம்-ஒழுங்கு போலீசாரும் இணைந்து இந்த சோதனை வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.
நேற்று அதிகாலையில் மெரினா கண்ணகி சிலை அருகில் இருந்து, புறப்பட்ட 2 பேர், மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வருவதாகவும், அவர்களை மடக்கிப்பிடிக்கும் படியும் உயர் அதிகாரிகளிடம் இருந்து போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு வந்தது. உஷாரான போலீசார், அவர்களை மடக்கி பிடிக்க தயாராகி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், போலீசாரை பார்த்ததும், மெரினா காமராஜர் சாலையில் இருந்து உள்பக்கமாக சென்றனர். ஆனால் அவர்களை போலீசார் விரட்டிச் சென்றனர்.
அவர்கள் மீண்டும் காமராஜர் சாலைக்கு வந்து தப்பிச்சென்றனர். ஆனால் விடாமல் துரத்திச்சென்ற போலீசார், அவர்கள் இருவரையும், போர் நினைவுச்சின்னம் அருகில் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் போலீசாரிடம் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
ஒரு வழியாக அவர்களை போலீசார் அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாகவும், இரண்டு சட்டப்பிரிவுகளில் அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் 18 வயதான கல்லூரி மாணவர். இன்னொருவர் பெயர் ரபீக் (வயது 20). இருவரும் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.