லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; புதுமாப்பிள்ளை பலி
கறம்பக்குடி அருகே விறகு ஏற்றிகொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் புதுமாப்பிள்ளை பலியானார்.;
கறம்பக்குடி:
திருமணம்
கறம்பக்குடி அருகே உள்ள குளந்திரான்பட்டு பள்ளத்தான் மனை கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா மகன் கார்த்திகேயன் (வயது 30). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். திருமணத்திற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார். இவருக்கு 2 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கார்த்திகேயன் நேற்று இரவு அவரது வீட்டில் இருந்து கல்லாக்கோட்டையில் இருந்த மனைவியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கறம்பக்குடி அருகே உள்ள சொக்கன் தெரு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அப்பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு விறகு ஏற்றிக்கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
புதுமாப்பிள்ளை பலி
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கார்த்திகேயனின் அண்ணன் தனபால் கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.