மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வியாபாரிகள் பலி
கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வியாபாரிகள் பரிதாபமாக இறந்தனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நடந்தது.;
கீரனூர்:
வியாபாரிகள்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 54). பூக்கடை நடத்தி வந்தார். கீரனூர் கேர் காலனி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (48). காய்கறி வியாபாரி. நண்பர்களான இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டையில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை மாயாண்டி ஓட்டினார். கீரனூர் அருகே குளத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே கீரனூரில் இருந்து உப்பிலியக்குடியை நோக்கி கால்நடை ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்க்கும் கருப்பையா என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், மாயாண்டி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேராக மோதியது.
2 பேர் பலி
இதில் மாயாண்டி, சண்முகம் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தனர். கருப்பையா ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவருக்கு தலையில் காயம் ஏற்படவில்லை. கைகளில் மட்டும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாயாண்டி, சண்முகம் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கருப்பையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி வரும் போது வியாபாரிகள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.