பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்:மின்வாரிய அதிகாரி பலி

பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மின்வாரிய அதிகாரி பலியானார்.

Update: 2023-08-18 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் ைசக்கிள் மோதியதில் மின்வாரிய அதிகாரி பரிதாபமாக பலியானார்.

மின்வாரிய அதிகாரி

தூத்துக்குடி தாமஸ்நகர் பகுதியைச் சேர்ந்த சிலுவை மகன் அமல்ராஜ் பிரபு (வயது 54). இவர் எப்போதும்வென்றானில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைனிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பணி நிமித்தமாக எப்போதும்வென்றானில் இருந்து தூத்துக்குடியிலுள்ள கண்காணிப்பாளர் அலுலகத்துக்கு பணி நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுப்பிரமணியபுரம் விலக்கு அருகே கன்டெய்னர் லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது.

லாரி மீது மோதல்

மாலை 6.30 மணியளவில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த அமல்ராஜ் பிரபுவின் மோட்டார் சைக்கிள் திடீரென்று கட்டுப்பாட்டை இழுந்து கண்டெய்னர் லாரியின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அமல்ராஜ் பிரபு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த எப்போதும்வென்றான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அமல்ராஜ் பிரபுவின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அமுல்ராஜ் பிரபுவுக்கு அருண்கிளியோக்பா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்