சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் மின்மோட்டார் வழங்கும் திட்டம்

Update: 2023-01-18 18:45 GMT

தர்மபுரி:

சிறு, குறு விவசாயிகள் மானியத்துடன் மின்மோட்டார், பம்பு செட் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மானியத்துடன் மின்மோட்டார்

வேளாண்மை பொறியியல் துறை மூலமாக விவசாய பாசனத்திற்கு 5 ஏக்கர் வரை நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய மின்மோட்டார், பம்பு செட் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள பழைய மற்றும் திறனற்ற மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்புபவர்கள், தற்போது உள்ள டீசல் பம்பு செட்டுகளை எலக்ட்ரிக் மோட்டார் பம்பு செட்டுக்கு மாற்ற விரும்பும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இதேபோல் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளில் புதிய ஆழ்துளை கிணறு அல்லது திறந்தவெளி கிணறு, குழாய் கிணறு அமைத்து புதிய மின் மோட்டார் பெற விரும்பும் விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் மின் மோட்டார்களை வேளாண்மை பொறியியல் துறை தலைமை பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். 10 எச்.பி. வரை திறன் உள்ள மின்மோட்டார்கள் வாங்கலாம். அதற்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை மானியம் இதில் எது குறைவோ அது பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

முன்னுரிமை

இந்த திட்டத்தின்படி நடப்பு நிதி ஆண்டில் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு 160, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 20 என மொத்தம் 180 எண்ணிக்கையில் ரூ.18 லட்சம் மானியத்தில் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம ஊராட்சி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவர்கள் பிரதம மந்திரி சிஞ்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் அமைத்திருக்க வேண்டும். அல்லது அமைக்க விண்ணப்பித்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 4 நட்சத்திர மதிப்பீட்டை கொண்ட பம்பு செட் வாங்க வேண்டும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு விவசாயிகளுக்கான சான்று, புகைப்படம், வங்கி கணக்கு எண் மற்றும் மின் இணைப்பு அட்டை, ஆதார் அட்டை ஆகிய விவரங்களுடன் தர்மபுரியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகம், தர்மபுரி மற்றும் அரூரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்