அன்னையர் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

அன்னையர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Update: 2024-05-12 05:30 GMT

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா! தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள்! ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்!" என்று தெரிவித்துள்ளார்.


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "பூமி தாங்கும் முன்பே, நம்மையெல்லாம் பூவாய் தாங்கியதோடு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும், அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

'அம்மா' என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவுதான் நமக்கெல்லாம் வருகிறது.

போற்றுதலுக்குரிய அன்னையர் அனைவரும் பூரண நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நிறை வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, உலகம் முழுவதும் வாழும் அன்னையர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள பதிவில், "அன்பின் முழு உருவமாய்த் திகழ்ந்து, குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னையர் தினத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னையரை இன்று மட்டுமில்லை. எந்நாளும் போற்றி வணங்குவோம்!" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்