ஆன்லைன் மூலம் பீரோவை விற்க முயன்ற தாய்- மகளிடம் ரூ.11 லட்சம் மோசடி

ஆன்லைன் மூலம் பீரோவை விற்க முயன்ற தாய் -மகளிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-11-19 00:52 GMT

ஆன்லைன் மூலம் பீரோவை விற்க முயன்ற தாய் -மகளிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பீரோ விற்பனை

பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த தாய், மகள் தங்களிடம் இருந்த பழைய பீரோவை விற்க ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தனர். அதன் விலை ரூ.6 ஆயிரம் ஆகும். இந்த விளம்பரத்தை பார்த்து வடமாநில வாலிபர் ஒருவர், அந்த பெண்ணிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் உங்கள் பீரோவை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கூகுள் பே மூலம் உங்களுக்கு பணம் அனுப்பி விடுகிறேன் என்று கூறி முதலில் அந்த நபர் கியூ ஆர் கோர்டை அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு அனுப்பி உள்ளார். அந்த பெண்ணை முதலில் ஒரு ரூபாய் அனுப்ப சொல்லி உள்ளார். பின்னர் அந்த நபர் ரூ.2 அனுப்பி உள்ளார்.

ஓ.டி.பி. எண்

இதைத்தொடர்ந்து அந்த பெண் ரூ.100 அனுப்ப அந்த நபர் ரூ.200 அனுப்பி உள்ளார். பின்னர் அந்த பெண் ரூ.6 ஆயிரம் ரூபாய் அனுப்ப அந்த நபர் ரூ.12 ஆயிரம் அனுப்ப வேண்டும். ஆனால் அந்த நபர் அனுப்பவில்லை. இது குறித்து அந்த பெண் அந்த நபரிடம் கேட்டபோது பணம் அனுப்புவதில் ஏதோ பிரச்சினை உள்ளது. உங்கள் செல்போன் எண்ணிற்கு ஒரு ஓ.டி.பி. வரும் அந்த எண்ணை பார்த்து சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

இதை உண்மை என்று நம்பி அந்த பெண் தனக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை கூறியுள்ளார். அடுத்த நிமிடமே அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 43 ஆயிரத்து 869 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அந்த பெண் சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டபோது ஒன்றும் பிரச்சினை இல்லை பணம் திரும்பவும் வந்துவிடும். உங்கள் செல்போன் எண்ணிற்கு தற்போது ஒரு ஓ.டி.பி. எண் வந்துள்ளது அதை சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

ரூ.11 லட்சம்

இதைத்தொடர்ந்து அந்த பெண் தனக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை கூறியுள்ளார். அடுத்த நிமிடம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது. இவ்வாறாக தொடர்ந்து அந்த பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த பெண் அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்