கந்து வட்டி புகாரில் தாய்- மகன் கைது

சீர்காழி அருகே கந்து வட்டி புகாரில் தாயும், மகனும் கைது செய்யப்பட்டனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2022-06-29 17:02 GMT

சீர்காழி அருகே கந்து வட்டி புகாரில் தாயும், மகனும் கைது செய்யப்பட்டனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மருந்து கடை உரிமையாளர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள எடமணல் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது35). அதே ஊரில் மருந்து கடை நடத்தி வரும் இவர், வழுதலைகுடி அக்ரஹார தெருவை சேர்ந்த சோலையம்மாள் (65) என்பவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.3 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இதற்காக அவர் தனது வீட்டை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

கடன் வாங்கி 3 ஆண்டுகளான நிலையில் வாசுதேவன் சோலையம்மாளிடம் ரூ.3 லட்சத்தை திருப்பி கொடுத்து, பத்திரத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அசல் வட்டியுடன் சேர்த்து ரூ.7 லட்சம் கொடுத்தால் தான் பத்திரப்பதிவை ரத்து செய்து தருவேன் என சோலையம்மாள் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாசுதேவன் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம், சோலையம்மாள் கந்து வட்டி கேட்பதாக புகார் அளித்தார்.

தாய்- மகன் கைது

அதன்ேபரில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக், இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் சோலையம்மாள் மீது கந்துவட்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவருடைய வீட்டை சோதனை செய்வதற்கு சீர்காழி கோர்ட்டில் அனுமதி பெற்று அதன்படி நேற்று மாலை சோலையம்மா வீட்டில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் பலருக்கு கடன் கொடுத்த வகையில் 25 பத்திரங்கள், வெறும் கையெழுத்து மட்டும் பெற்ற 11 பத்திரங்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பத்திர ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கந்துவட்டி வழக்கில் சோலையம்மாள், அவருடைய மகன் ஜெயவீரபாண்டியன் (40) ஆகியோரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்