தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் கொளுத்தியது

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் நேற்று வெயில் கொளுத்தியது. கரூரில் மட்டும் நேற்று இயல்பான அளவைவிட 7 டிகிரி அதிகமாக வெப்பம் பதிவானது. இன்னும் 2 நாட்களுக்கு இதேநிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-06-17 00:24 GMT

சென்னை,

கோடை வெயிலின் தாக்கம் கொஞ்சம் கூட குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது.

தென் மேற்கு பருவமழை தொடங்கியதும், தென்மேற்கு திசை காற்று தமிழ்நாட்டு பகுதிகளுக்கு வீசத்தொடங்கும். அதன் பின்னர் வெயில் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், பருவமழை தொடங்கிய பிறகும் வெப்பம் குறைந்தபாடில்லை.

கரூரில் 7 டிகிரி அதிகம்

அந்த வகையில் நேற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் கொளுத்தியது. வானிலை ஆய்வு மையத்தின் வெயில் பதிவாகும் இடங்களின் பட்டியலில் கோவை, கன்னியாகுமரி, கொடைக்கானல், ஊட்டி, வால்பாறை, தொண்டி, பாம்பன் ஆகிய இடங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வெப்பத்தின் அளவு 100 டிகிரியை கடந்துதான் பதிவாகியிருந்தது.

அதன்படி, 18 இடங்களில் வெப்ப அளவு 100 டிகிரியை தாண்டியிருந்தது. அதில் 14 இடங்களில் 103 டிகிரியை தாண்டியும், 4 இடங்களில் 100 டிகிரியை தாண்டியும் பதிவானது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 107 டிகிரி பதிவாகியது. இவற்றில் கரூரில் மட்டும் இயல்பான அளவைவிட நேற்று 7 டிகிரி அதிகமாக பதிவானது.

வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் கேட்டபோது, 'இன்னும் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) இதே நிலைதான் நீடிக்கும். அதன்பிறகு 19 மற்றும் 20-ந் தேதிகளில் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. பின்னர் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையத்தொடங்கிவிடும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்