மாவட்டத்தில் முருங்கை நாற்றங்கால் ரூ.65½ லட்சத்தில் அமைப்பு
கரூர் மாவட்டத்தில் முருங்கை நாற்றங்கால் ரூ.65½ லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது.;
தோட்டக்கலை நாற்றங்கால்
தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியணை ஊராட்சியில் முருங்கை நாற்றங்கால் மற்றும் தோட்டக்கலை நாற்றங்கால் அமைக்கப்பட்டு வருவதை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு திட்ட செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தில் உள்ள 2022-23-ம் ஆண்டு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முருங்கை நாற்றங்கால் மற்றும் தோட்டக்கலை நாற்றங்கால் அமைக்கப்பட்டு அதன் மூலம் மயில்கொன்றை, அயல்வாகை போன்ற மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் உள்ள 22 தோட்டக்கலை நாற்றங்கால் மூலம் ரூ.28 லட்சத்து 82 ஆயிரத்தில் சுமார் 15 ஆயிரம் எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் சாலையின் இருபுறங்களிலும், வேம்பு, புளிய மரம் போன்ற மரக்கன்றுகள் மற்றும் பொது இடங்களில் ஆலமரம், அரசமரம் போன்ற கன்றுகள் வளர்க்கப்படுகிறது.
வாழ்வாதாரத்தை மேம்படுத்த...
மேலும் புங்கை போன்ற மர வகைகள் ஊராட்சிகளில் உள்ள தெருக்களில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் 8 வட்டார நாற்றங்கால் ரூ.54 லட்சத்து 88 ஆயிரத்தில் அமைக்கப்பட்டு, நெல்லி, மாதுளை, சப்போட்டா, கொய்யா போன்ற பழவகை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வீடுகள் தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 50 முருங்கை நாற்றங்கால் ரூ.65½ லட்சத்தில் அமைக்கப்பட்டு, முருங்கை நாற்றுக்கள் 30 செ.மீ முதல் 4 அடி உயரம் வரை ஆரோக்கியமாக வளர்க்கப்பட்டு மகளிர் பங்களிப்பினை உயர்த்தவும், மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு அனைத்து ஊராட்சிகளிலும் தகுந்த இடத்தில் நடப்பட்டு மகளிர்சுய உதவிக் குழு மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பராமரிப்பும்
முருங்கை இலை மற்றும் அதன் காய்களில் அதிக இரும்புச் சத்துள்ளதால் இதனை பெண்கள் மற்றும் வளரிளம் பெண்கள் உட்கொள்வதன் மூலம் ரத்தசோகை தடுக்கப்படும். ஆரோக்கியமான ஊராட்சிகளை உருவாக்கிடும் நோக்கிலும் முருங்கை நாற்றங்கால் வளர்க்கப்பட்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அனைத்து வளர்இளம் பருவ மகளிர் உள்ள வீடுகளிலும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளிலும் அரசுக்கு சொந்தமான இடங்களிலும், சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பருவமழைக்காலங்களில் நீராதாரம் சேகரிக்கப்பட்டு மண்வளம் பாதுகாக்கப்படுவதுடன் வெப்பச்சலனத்தால் ஏற்படக்கூடிய அதிகப்படியான வெப்பநிலையினை சீராக்கிட பெரும்பங்கும் வகிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.