கடந்த வாரத்தைவிட அதிகம்: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை 'கிடுகிடு' உயர்வு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரத்தை விட காய்கறிகளின் விலை ‘கிடுகிடு'வென உயர்ந்துள்ளது. அதில் முருங்கைக்காய், சின்ன வெங்காயம், முள்ளங்கி விலையில் சதம் அடித்தது.

Update: 2023-10-19 06:53 GMT

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளிக்கு கடும் கிராக்கி இருந்தது.

பருவமழையால் வரத்து குறைந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்திருந்தது. மொத்த மார்க்கெட்டிலேயே ஒரு கிலோ ரூ.180 வரை சென்றது. அதன் பின்னர் விலை குறைந்து, தற்போது ஒரு கிலோ ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த வாரத்தை விட காய்கறிகளின் விலை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக முருங்கைக்காய், சின்ன வெங்காயம், முள்ளங்கி, அவரைக்காய், பச்சைப் பட்டாணி, பல்லாரி ஆகியவை உள்பட சில காய்கறிகளின் விலை 'கிடுகிடு' வென உயர்ந்துள்ளது.

சின்ன வெங்காயத்தை பொறுத்தவரையில், கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.65 வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்பட்டது. திண்டுக்கல், தேனி, ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி உள்பட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது. இங்கு விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைந்து, அதன் விலை ரூ.100 வரை உயர்ந்திருக்கிறது.

இதேபோல், கடந்த வாரத்தில் ரூ.60-க்கு விற்பனையான முருங்கைக்காய், நேற்று ரூ.90-க்கும், ரூ.55-க்கு விற்கப்பட்ட முள்ளங்கி, ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த வாரத்தில் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சைப்பட்டாணி தற்போது ரூ.120-க்கும், ரூ.50-க்கு விற்பனையான அவரைக்காய் ரூ.70-க்கும், ரூ.32 வரை விற்கப்பட்ட பல்லாரி ரூ.40-க்கும் விற்பனை ஆகிறது.

மொத்த மார்க்கெட்டில் இந்த விலை என்றால், சில்லரை கடைகளில் இதைவிட கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகமாக விற்கப்பட்டதை பார்க்க முடிந்தது. அந்தவகையில் சில்லரை கடைகளில் சின்ன வெங்காயம் ரூ.120 வரையிலும், முருங்கைக்காய், முள்ளங்கி தலா ரூ.110 வரையிலும் விற்பனை ஆனது. இதுதவிர மேலும் சில காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்திருக்கிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகள் விலை (ஒரு கிலோ) விவரம் வருமாறு:-

பல்லாரி - ரூ.30 முதல் ரூ.40 வரை, தக்காளி- ரூ.8 முதல் ரூ.15 வரை, உருளைக்கிழங்கு- ரூ.16 முதல் ரூ.32 வரை, சின்ன வெங்காயம்- ரூ.80 முதல் ரூ.100 வரை, கேரட்- ரூ.20 முதல் ரூ.30 வரை, பீன்ஸ்- ரூ.60 முதல் ரூ.70 வரை, பீட்ரூட்- ரூ.20 முதல் ரூ.40 வரை, சவ்சவ்- ரூ.15 முதல் ரூ.20 வரை, முள்ளங்கி- ரூ.80 முதல் ரூ.100 வரை, முட்டைக்கோஸ்- ரூ.8 முதல் ரூ.12 வரை, வெண்டைக்காய்- ரூ.10 முதல் ரூ.20 வரை, கத்தரிக்காய்- ரூ.20 முதல் ரூ.30 வரை, பாகற்காய்- ரூ.25 முதல் ரூ.30 வரை, புடலங்காய்- ரூ.12 முதல் ரூ.15 வரை, சுரைக்காய்- ரூ.16 முதல் ரூ.25 வரை, சேனைக்கிழங்கு- ரூ.55, முருங்கைக்காய்- ரூ.80 முதல் ரூ.90 வரை, சேப்பக்கிழங்கு- ரூ.25 முதல் ரூ.30 வரை, மிளகாய்- ரூ.35, பச்சைப்பட்டாணி- ரூ.80 முதல் ரூ.120 வரை, இஞ்சி- ரூ.80 முதல் ரூ.210 வரை, அவரைக்காய்- ரூ.60 முதல் ரூ.70 வரை, பூசணிக்காய்- ரூ.15, பீர்க்கங்காய்- ரூ.40, நூக்கல் - ரூ.35 முதல் ரூ.40 வரை, கோவக்காய்- ரூ.20 முதல் ரூ.25 வரை, கொத்தவரங்காய்- ரூ.22 முதல் ரூ.30 வரை, வாழைக்காய் (காய் ஒன்று) - ரூ.8, காலிபிளவர் (ஒன்று) - ரூ.30, தேங்காய் (காய் ஒன்று) - ரூ.32.

Tags:    

மேலும் செய்திகள்