ஆவடி மாநகராட்சி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது
ஆவடி மாநகராட்சி பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேராடு சாய்ந்தது.
மாண்டஸ் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. சில இடங்களில் மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தது.
ஆவடியில் 17 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. ஆனாலும் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் மழை நீரால் எந்த பகுதிகளும் அதிகமாக பாதிக்கப்படவில்லை.
குறிப்பாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வசந்தம் நகர், சந்திரா சிட்டி, சரஸ்வதி நகர், கோவில்பதாகை, பாரதியார் நகர், பிருந்தாவன் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு அடி அளவுக்கு சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
நேற்று முன்தினம் இரவு சூரைக்காற்று வீசியதால் திருமுல்லைவாயல், பருத்திப்பட்டு, பட்டாபிராம், மாடர்ன் சிட்டி, எம்.ஆர்.எப். நகர், சிந்துநகர், கரியப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது.
ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.
பட்டாபிராம் மாடர்ன் சிட்டி, உழைப்பாளர் நகர் பகுதிகளில் சாலைகளில் இருந்த மின் கம்பங்கள் சாய்ந்தன. அவற்றை உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்தனர். இதனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.