சமரச மையம் மூலம் அதிக வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்
சமரச மையம் மூலம் அதிக வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாலா அறிவுறுத்தியுள்ளார்.;
பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற சமரச மையம் சார்பில் நீதிபதிகள், சமரச மைய தீர்வாளர்கள், வக்கீல்கள் ஒருங்கிணைந்த முத்தரப்பு கூட்டம் நீதிமன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், பெரம்பலூர் மாவட்ட நிர்வாக பொறுப்பு (போர்ட் போலியோ) நீதிபதியுமான மாலா கலந்து கொண்டு பேசுகையில், பெரம்பலூர் மற்ற மாவட்டங்களை விட சமரச மையம் மூலம் அதிக வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். அதற்கான அனைத்து விதமான ஒத்துழைப்பையும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கும். சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள், என்றார். உயர்நீதிமன்ற சமரச மைய சமரச பயிற்சியாளர் பத்மா நேரடியாக கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தினை பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சமரச மைய தலைமை ஒருங்கிணைப்பாளருமான பல்கீஸ் முன்னின்று நடத்தினார். நீதிமன்ற நீதிபதிகளும், பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் வள்ளுவன் நம்பி, அட்வகேட் அசோசியேசன் சங்க மாவட்ட தலைவர் மணிவண்ணன் மற்றும் அரசு வக்கீல்கள், சமரச மைய வக்கீல்கள் உட்பட அனைத்து வக்கீல்களும் கலந்து கொண்டு சமரசம் குறித்து பேசினர். முன்னதாக குடும்ப நல நீதிபதி தனசேகரன் வரவேற்றார். முடிவில் சமரச மைய ஒருங்கிணைப்பாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் நன்றி கூறினார்.