300 மாணவிகளுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகை
புதுமைப்பெண் திட்டத்தில் 2-ம் கட்டமாக 300 மாணவிகளுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகையை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
புதுமைப்பெண் திட்டத்தில் 2-ம் கட்டமாக 300 மாணவிகளுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகையை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
கல்வி உதவித்தொகை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தில் கீழ் 2-ம் கட்டமாக கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஏ.வி.சி. கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் 300 மாணவிகளுக்கு 2-ம் கட்டமாக மாதம் தலா ரூ.1000 பெறுவதற்கான ஆணைகளை வழங்கி கலெக்டர் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
830 மாணவிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் முதல் கட்டத்தில் 758 மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். தற்போது 2-ம் கட்டமாக 830 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் 300 மாணவிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கிற்கு கல்வி உதவித்தொகை நேரடியாக செலுத்தப்படும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழுத்தலைவி காமாட்சிமூர்த்தி, உதவி கலெக்டர் யுரேகா, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.