சில வழிகாட்டுதலுடன் மாதாந்திர மின்கட்டண முறை அமல்படுத்தப்படும் -அமைச்சர் பேட்டி

சில வழிகாட்டுதலுடன் மாதாந்திர மின்கட்டண முறை அமல்படுத்தப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Update: 2023-02-05 21:08 GMT

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, ஈரோட்டில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

இரும்பு கோட்டை

கொங்கு மண்டலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரும்பு கோட்டை. மார்ச் மாதம் 2-ந் தேதி கை சின்னம் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என பாருங்கள்.

இல்லாத அண்ணாமலையை பற்றி என்ன கருத்து சொல்ல. அவர்களது கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் உள்ளார்கள் என கேளுங்கள். தி.மு.க.வில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளார்கள் என கூறுகிறோம். அவர்கள் மிஸ்டு கால் பார்ட்டி. அவர்கள் இந்த தேர்தலில் எத்தனை பூத் கமிட்டி போட்டுள்ளார்கள். அதில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளார்கள் என சொல்லட்டும்.

50 சதவீத காலிப்பணியிடங்கள்

அதேநேரம் நாங்கள் 238 வாக்குச்சாவடியிலும் பூத் கமிட்டி அமைத்து, வாக்காளர்கள் பட்டியலை சரி பார்த்துவிட்டோம். சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதியில் 85 சதவீத வாக்குறுதிகளை கடந்த 1½ ஆண்டுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். மீதமுள்ள அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என அவர் கூறி உள்ளார்.

மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு சாத்தியமில்லை என நான் கூறவில்லை. முதல்-அமைச்சர் அதை விரைவில் நிறைவேற்றுவார். கணக்கெடுப்பு செய்யக்கூடிய பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 50 சதவீதம் காலிப்பணியிடமாக உள்ளது. அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

மாதாந்திர மின்கட்டண முறை

ஸ்மார்ட் மீட்டர் அமைப்பதற்காக டெண்டர் விடும் பணிகள் நடந்து வருகிறது. ஸ்மார்ட் மீட்டர் போட்டுவிட்டால், நீங்களே அப்போதும் ஒரு கேள்வி கேட்பீர்கள். ஸ்மார்ட் மீட்டர் அமைத்ததால், கணக்கீட்டாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படுமா என கேட்பீர்கள்.

இந்த இரண்டில் எது முக்கியம் என்பதை கவனத்தில் கொண்டு நிறைவேற்றப்படும். சில வழிகாட்டுதலுடன், மாதாந்திர மின் கட்டண முறை அமல்படுத்தப்படும். இந்த பகுதியில் விசைத்தறி அதிகம் உள்ளது. கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தாததுபோல் மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்